Pages

Monday, November 25, 2013

பூஜா முறைகள்

உஷத்கால பூஜை :
     

              சூர்ய உதயத்துக்குக் குறைந்தது 5 நாழிகைகள் (2 மணி நேரம்) முன்பு எழுந்து வாக்கினால் தோத்திரமும் மனத்தினால் இறைவனது தியானமும் செய்துகொண்டு, இரண்டு நாழிகைக்குள் காலைக்கடன்களை முடித்துக்கொள்ளவேண்டும். பின்னர், ஸ்நானம் செய்து, வெண்மையான வேஷ்டி அங்கவஸ்த்ரம் உடுத்தி, விபூதி, ருத்ராக்ஷம் போன்ற சிவச்சின்னங்களை அணிந்து, ஆசமனம், அனுஷ்டானங்களை செய்துவிட்டு, ஆலயம் செல்ல வேண்டும். கோயில் வாயிலில் கைகால்களைக் கழுவிக்கொண்டு எதிர்ப்படும் நந்தி தேவரையும் துவாரபாலகர்களையும் ப்ரார்த்தித்து அவர்தம் அனுமதி வேண்டி, திருக்கோவில் வளாகம் புகவேண்டும். அங்கே சகளீகரணம் செய்து, சாமான்யார்க்யம் கூட்டி, அந்த அர்க்ய நீரினால் தன் மீதும் புறத்தே உள்ள பொருள்கள் மீதும் தெளித்து, அனைத்தையும் தூய்மையாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஆத்மார்த்த பூஜையாக கரந்யாஸம், ப்ராணாயாமம் செய்து, பூதசுத்தி, அந்தர்யாகம், சிவோகம்பாவனை ஆகிய மூன்று கிரியைகளைச் செய்ய வேண்டும். இவற்றால் அருச்சகர் சிவபூஜைக்குத் தகுதி வாய்ந்தவர் ஆகிறார். பின்னர், திருக்கோயில் வளாகம் காவல் காக்கும் பொறுப்புள்ளவரிடம் இருந்து பைரவர் ஸந்நிதியின் திறவுகோலைப் பெற்று, பைரவரின் நடையைத் திறக்க வேண்டும். ÷க்ஷத்திரபாலகரை (பைரவரை) பூஜித்து, பொறி நைவேத்யம் செய்து, முதல் நாள் இரவு ஒப்புவிக்கப்பட்டு இதுகாறும் அவர் வயம் இருக்கும் பள்ளியறைத் திறவுகோல் மற்றும் முத்திரா தண்டம் (சாவிக்கொத்து) ஆகியவற்றை அங்குச் முத்திரையால் எடுக்க வேண்டும். பின்னர், அனைத்து ஸந்நிதிகளையும் திறக்கச் செய்து அவற்றின் ஸாந்நித்யம் கலைக்கப்படாமல் வாத்தியங்கள், தோத்திரப் பாடல்கள் இசைக்க, பள்ளியறை சென்று, வெளியே இருந்து திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் இசைக்க வேண்டும். பின்னர் துவார பூஜை செய்து, கதவுகளைத் திறப்பதற்குக் காலகாலனது அனுமதியை வேண்டி, கதவில் திறவுகோல் நுழைவதற்குரிய துவாரத்தை பிந்து வடிவினாகத் தியானித்து, பின் அருச்சித்து, திறவுகோலை நாத வடிவினதாகத் தியானித்து பிந்துவினுள் செலுத்தி, சக்தி-சிவ மந்திரங்களை உச்சரித்த வண்ணம் பள்ளியறைக் கதவினைத் திறந்திடல் வேண்டும். பவித்ரமான அர்க்ய நீரினால் உட்புறம் முழுதும் தெளித்து, நிர்மால்யம் களைந்து, பாவனையால் ஸ்நானம் முதலானவை செய்வித்து, ஆசமநீயம் ஆகியவற்றை முறைப்படி அளித்து, அவரை வெளியே எழுந்தருளும் வண்ணம் வேண்டி நிற்றல் வேண்டும். பின்னர் சக்தியை (மனோன்மணியை) அங்கேயே விடுத்து, இறைவனை (பாதுகையை) மட்டும் சிவிகையில் (பல்லக்கில்) எழுந்தருளுச் செய்து, வலமாக எடுத்து வந்து, கருவறை சேர்ப்பிக்க வேண்டும். அங்கு மூலமூர்த்திக்கு முன் பூவைக் கையில் எடுத்துக் கொண்டு, மூலலிங்கத்தில் சேர்த்திடல் வேண்டும். பிறகு உஷத்கால பூஜையாக ஸ்தான சுத்தி செய்து, பூதேவியை வழிபட்டு, திரவ்ய சுத்தி செய்து, கணபதியை பூஜிக்க வேண்டும். பிறகு, ஸ்வாமி, ஸோமாஸ்கந்தர், மகேச்வராதிகள், அம்பாள் ஆகியோரை விதிப்படி பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில் சூர்யோதயம் ஆக வேண்டும்.

No comments:

Post a Comment